Ads Here

Thursday 14 October 2021

போதைப்பொருள் பாவனை

 


போதைப்பொருள் பாவனை  ༻


குடி குடியைக் கெடுக்கும் என்பார்கள். மது மாத்திரமன்றி எல்லா போதைப் பொருட்களும் தீமை பயக்கவல்லவை. அவற்றை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

ஜாஹிலிய்யாக்கால மக்கள் மதுபானப் பிரியர்களாக இருந்தனர். இஸ்லாம் மதுபானத்தை கட்டம் கட்டமாக, படிப்படியாக தடைசெய்து, இறுதியில் மதுப் பழக்கத்தை முற்றாக ஒழித்தது. ஆரம்பத்தில் மதுபானத்தில் உள்ள நன்மைகளை விட தீமைகள் அதிகம் என்று அல்குர்ஆன் கூறியது. அடுத்த கட்டமாக போதையுள்ள நிலையில் தொழுகைக்குச் செல்ல வேண்டாம் என்று தடுத்தது. மூன்றாம் கட்டமாக ஸுரா அல்மாயிதாவின் 90, 91ஆம் வசனங்கள் இறங்கின:


➛ ''விசுவாசிகளே! மதுபானமும் சூதாட்டமும் விக்கிரக வணக்கமும், அம்பெறிந்து குறிகேட்பதும் ஷைத்தானுடைய அருவருக்கத்தக்க வேலைகளிலுள்ளவையாகும். ஆகவே, இவைகளிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். (அதனால்) நீங்கள் வெற்றி பெறுவீர்கள்''


➛ ''மதுபானத்தின் மூலமும் சூதாட்டத்தின் மூலமும் உங்களுக்கிடையில் விரோதத்தையும் குரோதத்தையும் உருவாக்கவும் அல்லாஹ்வின் நினைவிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்துவிடவுமே நிச்சயமாக ஷைத்தான் விரும்புகிறான். (ஆகவே இவைகளிலிருந்து) நீங்கள் விலகிக் கொள்வீர்களா?''


அல்லாஹுதஆலா இந்த இரு வசனங்களிலும் மதுபானத்தையும் சூதாட்டத்தையும் ஷிர்க்குடன் இணைத்துக் குறிப்பிட்டுள்ளான். அறுவருக்கத்தக்க செயல்கள் என்றும் வர்ணிக்கின்றான். மதுவையும், சூதையும் தவிர்ப்பதை வெற்றிக்கான வழி என்றும் கூறுகின்றான். மேலும் இவை இரண்டின் மூலமாகவும் ஏற்படும் சமூக ரீதியான தீங்குகள் என, உறவுகள் அறுக்கப்படுவதையும், பகைமையும் வெறுப்பும் தோன்றுவதையும் குறிப்பிட்டுள்ளான். மேலும் திக்ர், தொழுகை முதலான ஆன்மீக சன்மார்க்க கடமைகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இவை இரண்டும் அமைகின்றன எனக் கூறி இவற்றினால் விளையும் ஆன்மீகக் கேடுகளையும் அல்லாஹ் விளக்குகின்றான்.


இந்த அல்குர்ஆன் வசனங்களை நபித் தோழர்கள், இறைவிசுவாசிகள் எதிர்கொண்ட விதம் அற்புதமானது. அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை செவிமடுத்தவுடன் மதுக் கிண்ணங்களை கையில் வைத்துக் கொண்டிருந்தோர் அப்படியே அவைகளை தரையில் தூக்கி எறிந்தார்கள். வீதிகளில் இருந்த மதுபானப் பீப்பாக்களை உடன் கொட்டி வீதிகளில் ஓடவிட்டார்கள்.


# போதையை ஏற்படுத்தும் அனைத்தும்; மது பானம் ஆகும் அனைத்தும் மதுவும் ஹராமாகும். 

(முஸ்லிம்)


◉ இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகிறது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு அடிமையாகும் பிரச்சினை பலராலும் பேசப்படுகின்றது.


◉ பாடசாலைக்குச் சென்று பல்கலைக்கழகம் முடித்து பட்டதாரிகளாக வருவதற்குப் பதிலாக போதைக்கு அடிமையாகி பரிதாபகரமாக காட்சித் தருகிறார்கள்.


◉ மாணவர்கள் தங்களது இளமைப்பருவத்தில் நடத்தும் அட்டகாசங்களை பற்றி சிந்திக்கிறார்களே தவிர அதனால் ஏற்படும் விபரீதங்கள் பற்றி சிந்திப்பதில்லை இதன் விளைவாகவே போதைக்கு ஆளாகுகின்றார்கள்.


◉ எந்த ஒன்றையும் அனுபவித்து பார்க்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் சில நேரம் அவர்களது அழிவுக்கே காரணமாகி விடுகின்றது.


⭕ சில சம்பவங்கள் வைத்தியர் ஒருவரின் கருத்து:-

" சில இளைஞர்கள் விபத்துக்குள்ளாகி வந்ததும் அவர்களை பரிசோதிக்கும்போது போதையில் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது"


⚠️ (சம்பவங்களை கூற நான் விரும்பவில்லை)


⍟ "போதைக்கு அடிமை" என்பதை கீழ்கண்ட விடயங்களை அறிந்து கொள்ளலாம்.


☛ ஆரம்பத்தில் பயன்படுத்திய அளவை விட சிறிது சிறிதாக அதிகரித்துக் கொண்டே செல்லுதல், மற்றும் அடிக்கடி போதை வேண்டும் என்று தோன்றுதல்.


☛ எதை இழந்தாலும் தனக்கு போதை தரக்கூடிய பொருளை அந்தந்த நேரத்தில் தனக்கு கிடைக்கும் விதமாக பார்த்துக் கொள்ளுதல். அல்லது அதை முன்னரே வாங்கி வைத்துக் கொள்ளுதள்.


☛ இப்பழக்கத்தை இன்றோடு விட்டுவிட வேண்டும் என்று சபதம் ஏற்றும் பலமுறை தோல்வி அடைவது.


☛ தனக்கு போதை தரக்கூடிய பொருளை அடைய கேவலமான செயல்களை கூட செய்யத் துணிவது.


# இதனால் ஏற்படும் கஷ்டங்கள் தீங்குகள் இன்னும் அடுக்கடுக்காக கூறலாம் ஆனால் பதிவு நீண்டு வாசிப்பவர் சடைவடைய கூடும்.


இஸ்லாம் மதுபானத்தை ஹராமாக்கியுள்ளமைக்கான காரணம் அது போதையை ஏற்படுத்துகின்றது என்பதாகும். எனவே ஒரு பானம் எந்த பொருளில் தயாரிக்கப்பட்டு இருந்தாலும் சேர்மானங்கள் எதுவாக இருந்தாலும் அது போதையை ஏற்படுத்தும் என்றிருந்தால் அது ஹராமாகக்  கொள்ளப்படும்.


போதைக்கு அடிமையானவர்களை பழக்கத்திலிருந்து மீட்க எத்தனையோ மறுவாழ்வு மையங்கள், அலோபதி, ஆயுர்வேத, சித்தா என எத்தனையோ மருத்துவ முறைகளும் இருக்கின்றன. எனினும் யார் இறை நம்பிக்கையில் தன் மனதை செலுத்தி இது பாவம் என எண்ணி  கைவிடுகின்றாரோ அவர்களால் மட்டும் தான் இத்தகைய பழக்கங்களில் இருந்து மீள்வது சாத்தியமாகும்.


Written by:- Abu Ayyash ✍🏻

No comments:

Post a Comment