Ads Here

Sunday 22 October 2023

*கண் கலங்க வைக்கும் ஜுலைபீப் (ரழி) அவர்களின் திருமண வரலாறு*

 *கண் கலங்க வைக்கும் ஜுலைபீப் (ரழி) அவர்களின் திருமண வரலாறு*



ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தன் தோழர்களுடன் இருக்கும் நேரத்தில் ஜுலைபீப் (ரழி) அவர்களைப் பார்த்து ஓ ஜுலைபீபே! என்னிடம் ஏதாவது கேள், உனக்கு விருப்பமான ஏதாவது உள்ளதா? என்று கேட்கிறார்கள்.


அதற்கு ஜுலைபீப் (ரழி) அவர்கள் வெட்கம் கலந்த குரலில் ஓ அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹுத்தஆலா எனக்கு உங்களுடன் இருக்கும் பாக்கியத்தை தந்துள்ளானே.இதை விட பெரிய பாக்கியம் வேறு என்ன இருக்க வேண்டும் என்று கூறினார்.


நபிகளார் (ஸல்) அவர்கள் எனதருமைத் தோழரே! நீர் திருமணம் செய்ய ஆசைப்படுகின்றீரா? என்று ஜுலைபீப் (ரழி) அவர்களிடம் கேட்க அவரோ புன்னகைத்து விட்டு நம்மை யார் திருமணம் முடிக்க முன்வருவார்கள் என்று தனக்குள்ளே எண்ணிக்கொண்டார்.


என்றாலும், "ஆம்" யா ரஸூலுல்லாஹ் என பதிலளித்தார்  ஜுலைபீப் (ரழி) அவர்கள்.


பின்னர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் புகழ் பெற்ற ஒரு அன்ஸாரியின் வீட்டிற்கு சென்று நான் உங்களது மகளை பெண் கேட்டு வந்துள்ளேன் என்று கூறினார்கள்.


அந்த அன்ஸாரி நபித் தோழரோ யா ரஸூலுல்லாஹ்! இதை விட சிறந்த பாக்கியம் எங்களுக்கு வேறு என்ன இருக்க முடியும் என்று கூற நபிகளார் (ஸல்) அவர்களோ நான் எனக்காக பெண் கேட்டு வரவில்லை. எனது தோழர் ஜுலைபீப் (ரழி) அவர்களுக்கே பெண் கேட்டு வந்தேன் என்றார்கள்.


அந்த அன்ஸாரி ஸஹாபி மிக நொந்தவராக, ஜுலைபீப் (ரழி) அவர்களுக்கா? என வினவ நபியவர்கள் ஆம் என பதிலளித்தார்கள்.


அந்த அன்ஸாரி ஸஹாபி நபி (ஸல்) அவர்களிடம் நான் எனது மனைவியிடம் கலந்தாலோசனை செய்து விட்டு வருகிறேன் என்று சொல்ல செய்தி கேட்ட மனைவியோ கவலையும், அழுகையுமாக நான் ஜுலைபீப் (ரழி) அவர்களை தவிர வேறு எவருக்கும் எனது மகளை திருமணம் முடித்துக் கொடுப்பேன் என்று கூறுனாள்.


இவர்கள் பேசுவதை கேட்ட மகள் தனது பெற்றோரிடம் விவரம் கேட்டாள். அந்தப் பெண்ணோ மதீனாவின் மிகச் சிறந்த அழகியாக போற்றப்பட்டவள். சிறந்த தக்வாவுள்ள அந்தப் பெண் தன்னை அனைத்து இறை வணக்கங்களிலும் ஈடுபடுத்திக் கொள்வாள்.


அந்த சிறந்த பெண்மணி தனது தாயிடம் எனதருமைத் தாயே! அல்லாஹுத்தஆலாவை அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் நபிகளார் (ஸல்) அவர்களின் வேண்டுதலை நிராகரிக்கப் போகிறீர்களா என்று கேட்கிறாள்.

மேலும், அந்த இளம் பெண் அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்ய அதில் மாற்றுக் கருத்தளிக்க எந்த ஒரு இறை விசுவாசிக்கும் உரிமை இல்லை என்றும் கூறினாள்.


அல்லாஹ்வின் தூதர் நம்மை இழிவுபடுத்துவார் என்று நீங்கள் நினைக்கின்றீர்களா?

எவ்வளவு பெரிய, சிறந்த ஜுலைபீப் (ரழி) அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரே உங்களது மகளாகிய என்னை பெண் கேட்டு வந்துள்ளார்கள். தாயே! உங்களுக்கு தெரியாதா அல்லாஹ்வின் துதருடன் நெருக்கம் கொண்டவர்களைப் பார்த்து மலக்குமார்களே பொறாமை கொள்கின்றனர் என்று அந்தப் பெண் சாந்தமாக கூறுகிறாள்.


மேலும், அந்த இறையச்சம் கொண்ட பெண்மணி தனது தாயிடம் நபிகளார் (ஸல்) அவர்கள் அந்த ஸஹாபியை இங்கு அனுப்பியதை விட சிறந்த பாக்கியம் வேறொன்றுமில்லை. இதை விட சிறந்த கணவர் வேறு எவரும் எனக்கு இருக்க முடியாது என்றும் நபிகளார் (ஸல்) அவர்கள் சிறந்த பரிசுடன் நமது இல்லம் தேடி வர நீங்களோ அழுது கொண்டிருக்கிறீர்கள் என்றும் கூறினாள்.


அடுத்த நாள் இனிதே திருமணம் நடைபெற்றது.

உஸ்மான் (ரழி) அவர்களும் அலி (ரழி) அவர்களும் திருமண வலீமாவிற்கும் வீடு வாங்குவதற்கும் பணத்தை பரிசளித்தார்கள்.


ஜுலைபீப் (ரழி) அவர்கள் திருமணம் முடித்து குறுகிய காலத்திலே ஒரு யுத்தத்திற்கான அறிவிப்பு வருகிறது.

ஜுலைபீப் (ரழி) அவர்களைப் பார்த்து அவரது மாமனார் மருமகனே! நீங்களோ புதிதாய் திருமணம் ஆனவர். உங்களுக்கு இப்பொழுதே போர் கண்டிப்பு அல்ல. நீங்கள் உங்கள் மனைவியுடன் நேரத்தை மகிழ்ச்சியாக களியுங்கள் என்பதாக கூறினார்.


ஜுலைபீப் (ரழி) அவர்களோ பல வருடங்கள் கழித்து திருமணம் செய்தவர்.

அவர் தனது மாமனாரிடம் உங்களுக்கு இது ஆச்சரியமாக இல்லையா!? 

நமது தூதர் (ஸல்) அவர்களோ போர் முனையில் இருக்க என்னால் எப்படி வீட்டில் மனைவியுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்று கேட்கிறார்.


அசிங்கமான சின்ன உருவம் கொண்ட ஜுலைபீப் (ரழி) அவர்கள் கிட்டத்தட்ட அவரது உயர்த்தில் வாள் ஒன்றை ஏந்தியவராக போர்க் களம் நோக்கி விரைகிறார். எப்போதும் அமைதியாக வெட்கம் கொண்டவராய் காணப்படும் ஜுலைபீப் (ரழி) அவர்கள் இப்போது ஒரு சிங்கம் போல களத்தில் குதிக்கிறாரே என்பதைக் கண்டு மற்ற ஸஹாபாக்கள் வியப்படைகின்றனர். 

உத்தம ஸஹாபி ஜுலைபீபோ யுத்தக் களத்தில் பாய்ந்து எதிரிகளை வெட்டி வீழ்த்த ஆரம்பித்தனர்.


போர் முடிவடைந்ததும் நபிகளார் (ஸல்) அவர்கள் தனது மற்ற தோழர்களிடம் எவராவது தங்கள் குடும்பத்தில் போர்க் களத்திலிருந்து திரும்பவில்லையா என்பதனை பார்த்து விட்டு வாருங்கள் எனக் கூறினார்கள். நபிகளாருக்கு எல்லோரும் திரும்பி விட்டார்கள் என பதில் கிடைக்க அப்போது நபி (ஸல்) அவர்கள் கண்ணீருடன் இல்லை நான் எனதருமை ஜுலைபீப் (ரழி) அவர்களை இழந்து விட்டேன் அவரை சென்று பாருங்கள் என்று கூறினார்கள்.


பின்னர் அங்கு ஸஹாபாக்கள் ஜுலைபீப் (ரழி) அவர்கள் ஏழு காபிர்களை கொன்று விட்டு அவரும் ஷஹீதாக்கப்பட்டிருப்பதை காண்கிறார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.


நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம் குழி தோண்டச் சொல்லி ஜுலைபீப் (ரழி) அவர்களின் பொன்னான உடலை ஏந்தியவாறு "யா அல்லாஹ்! ஜுலைபீப் என்னிடமிருந்து; நான் ஜுலைபீபிடமிருந்து" என்று மூன்று முறை கூறினார்கள். மற்ற ஸஹாபாக்களும் அல்லாஹுத்தஆலா ஜுலைபீப் (ரழி) அவர்களுக்கு எவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளான் என்று கூறினார்கள்.


ஸஹாபாக்கள் ஜுலைபீப் (ரழி) அவர்களின் வாழ்க்கையைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்கள். 


ஜுலைபீப் (ரழி) அவர்கள் அல்லாஹ்வையும் அவனது தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களையும் அதிகம் நேசித்தார்கள். அவரும் மிகச் சிறந்த நிலையை அடைந்து விட்டார். ஜுலைபீப் (ரழி) அவர்களின் தோற்றமோ அசிங்கம். ஆனால், அல்லாஹ் அவருக்கு மிக அழகான மனைவியை கொடுத்தான். ஜூலைபீபோ மிக ஏழை. ஆனால், மிகவும் செல்வம் மிக்க பெண்மணியை கரம் பிடித்தார்.


ஜுலைபீப் (ரழி) அவர்களின் தியாக மரணத்தால் அவரது ஜனாஸாவில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான மலக்குமார்கள் வானத்திலிருந்து குவிந்தனர் என்று கூறப்படுகிறது.

ஸுப்ஹானல்லாஹ்..!!

No comments:

Post a Comment